முகப்பு
இந்தியா

சாதுக்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து: ம.பி. அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மத்தியப் பிரதேசத்தில் 5 சாதுக்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:03 AM
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் 5 சாதுக்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னும் 3 வாரங்களுக்குள் அதுதொடர்பான பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நர்மதை நதியைக் காப்பதற்கும், அதன் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கும் மத்தியப் பிரதேச அரசு சார்பில் சிறப்புக் குழு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த துறவிகள் நர்மதானந்த் மகராஜ், ஹரிஹரானந்த் மகராஜ், பாய்யூ மகராஜ், கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகாந்த் ஆகிய 5 பேருக்கு மாநில இணையமைச்சர் அந்தஸ்து வழங்கி மத்தியப் பிரதேச அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இது, பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளுக்கும் வித்திட்டது. இந்த நடவடிக்கைக்காக மாநிலத்தை ஆளும் பாஜக அரசை சாடி பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சாதுக்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்பகதூர் வர்மா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இணையமைச்சர் அந்தஸ்தில் உள்ள அந்தத் துறவிகளுக்கு செலவிடப்படும் தொகை அனைத்தும் மக்களின் வரிப்பணமாகத்தான் இருக்கும் என அதில் தெரிவித்துள்ள வர்மா, அதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் பி.கே.ஜெய்ஸ்வால், எஸ்.கே.அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.