முகப்பு
இந்தியா

பாஜகவின் செல்வாக்கு சரியத் தொடங்கி விட்டது

பாஜகவின் செல்வாக்கு சரியத் தொடங்கி விட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறினார். 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:13 AM
பகிர்:

பாஜகவின் செல்வாக்கு சரியத் தொடங்கி விட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறினார். 
நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா வர்த்தகக் கல்வி நிறுவனத்தில், வருடாந்திர இந்திய வர்த்தக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த சல்மான் குர்ஷித், பிடிஐ செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். பின்னார் அவர் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் ஒரு புறம் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலித் சமூகத்தினர் தங்களுடைய உரிமைக்காகப் போராடுகின்றனர். மற்றொரு புறம், வங்கிகளில் கோடிக் கணக்கில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. 
இந்தச் சூழலில் இந்தியா அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இதுபோன்ற சூழல் மீண்டும் வர வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது போலவே, தலித் சமூகத்தினருக்கும் பாஜக அரசு நெருக்கடி கொடுத்தது. அந்தச் சமூகத்தினர் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் எதிர்ப்பை நாட்டு மக்கள் கவனிக்கிறார்கள். 
நாட்டில் சமூக நல்லிணக்கம் உள்ளதா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது பாஜகவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. அக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கி விட்டது.
கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. 
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தால், அந்த வெற்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், தேர்தல்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், மக்கள் அதிருப்தியில் இடையூறு செய்யத் தொடங்கி விடுவார்கள். எனவே, மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் அனைத்து பிரச்னைகளும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 
பின்னர் அந்த தீர்ப்பை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராடுகிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றார் சல்மான் குர்ஷித்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.