முகப்பு
இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:16 AM
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1, 3, 5ஆம் தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், மே மாதம் 8ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இத்தேர்தலுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி பரிசீலனை நடைபெறவுள்ளது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க பாஜக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசி தேதியை மே மாதம் முதல் வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மேற்கு வங்க மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகவும், பிற கட்சி வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய திரிணமூல் காங்கிரஸார் அனுமதிப்பதில்லை எனவும் பாஜக சார்பில் வாதிடப்பட்டது. இதேபோல், மேற்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் அதிகாரிகள், பாஜக வேட்பாளர்களுக்கு வேட்பு மனு தொடர்பான படிவங்களை அளிக்க மறுப்பதாகவும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், ஏ.எம். சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனுதாரர் (பாஜக) மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையிலும், தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நேர்மையான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று நம்புகிறோம். ஏதேனும் அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ எழுத்துப்பூர்வமாக தங்களது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தால், அதற்கு தீர்வு காண்பதற்கு, சட்டத்துக்கு உள்பட்டு மாநில தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் எங்களால் தலையிட முடியாது; ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி இத்தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்தை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அணுகி தங்களது பிரச்னைகளுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.