ஹாங்காங்கில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடி கைது செய்யப்படுவாரா?: சீனா பதில்
வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்வது குறித்து ஹாங்காங் பிரதேச அரசு நிர்வாகம் முடிவெடுக்கும் என்று சீனா பதிலளித்துள்ளது
வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்வது குறித்து ஹாங்காங் பிரதேச அரசு நிர்வாகம் முடிவெடுக்கும் என்று சீனா பதிலளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, ஹாங்காங் சென்று பதுங்கியுள்ள நீரவ் மோடி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு இந்தப் பதிலை சீனா அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹூல் சோஸ்கி ஆகியோர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
இதனிடையே, சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் நீரவ் மோடி பதுங்கியிருக்கும் தகவல் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கடந்த வாரம் பேசியபோது, நீரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்கும்படி, சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பிரதேச அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம், நீரவ் மோடி குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு சுவாங் பதிலளிக்கையில், ' ஒரு நாட்டின் 2 ஆட்சி அமைப்புகளுக்கு உட்பட்டும், ஹாங்காங் பிரதேச அடிப்படை சட்டத்துக்கு உள்பட்டும், சீன மத்திய அரசு உதவி மற்றும் அனுமதியுடன், பிற நாடுகளுடன் ஹாங்காங் பிரதேச அரசு பரஸ்பர நீதித்துறை உதவி தொடர்பான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும். எனவே, நீரவ் மோடி கைது தொடர்பாக இந்திய அரசு முறைப்படி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், ஹாங்காங் பிரதேச அரசு தனது அடிப்படை சட்டம், சம்பந்தப்பட்ட பிற சட்டங்களை பின்பற்றும் என்றும், இந்தியாவுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் என்றும் சீனா நம்புகிறது' என்றார்.