இந்தியா

உடனடியாக வேண்டும் 'லோக் ஆயுக்தா’: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி! 

தமிழகத்தில் உடனடியாக 'லோக் ஆயுக்தா’ அமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புதுதில்லி: தமிழகத்தில் உடனடியாக 'லோக் ஆயுக்தா’ அமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களை சுதந்திரமாகக் கண்டறிந்து விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வெளிப்படையாக வழக்குத் தொடர முடியும்.

அந்த வழக்கின் மீதான விசாரணையில், அரசியல்வாதிகளோ அல்லது அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதவி பறிப்பு, சம்பள நிறுத்தம் மற்றும் பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். 

நாட்டிலேயே முதன்முறையாக இந்தச் சட்டம் மகாராஷ்டிராவில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக 15 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது வரை தமிழகம், தெலங்கானா, புதுவை, அருணாசலப்பிரதேசம், திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

எனவே இம்மாநிலங்கள் விரைந்து லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் ‘லோக் ஆயுக்தா’ அமைக்காததற்கான காரணம் குறித்து அனைத்து மாநிலங்களும் முறையான விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழகத்துக்கான மனுவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த விளக்கம் திருப்தியளிக்காத காரணத்தால், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அத்துடன் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகை அரசி... சினேகா!

போராட்டத்தில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்!

காயத்ரி மந்திரம் பாடி பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

கலாம் பயோப்பிக்கில் தனுஷை தேர்ந்தெடுத்தது ஏன்? ஓம் ராவத் விளக்கம்!

இதைத் தவிர வேறு கேள்வி இல்லையா? - பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT