இந்தியா

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரும் மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

DIN

நீதிபதி பி.ஹெச். லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது; நீதித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவும், நீதித்துறை அலுவலில் தடையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

குஜராத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌஸர் பி, நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவமானது போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, பின்னர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் வர்த்தகர் விமல் பத்னி, குஜராத் மாநில காவல்துறை முன்னாள் தலைவர் பி.சி. பாண்டே, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கீதா ஜோரி, காவல்துறை அதிகாரிகள் அபய் சூடசாமா, என்.கே. அமின் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஹெச். லோயா, தனது நண்பரது மகளின் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து வந்த லோயா திடீரென மரணமடைந்தது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி தெஹ்சீன் புனாவாலா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பி.எஸ். லோனே ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜெ. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை, குறிப்பிட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது குறித்து சந்தேகத்தை எழுப்பினர்.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தெரிவித்திருந்த கருத்துகளை அடிப்படையாக வைத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து சந்தேகம் கொள்வதற்கு எந்தவித காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், மீளாய்வு முடிவுகள், இயற்கையாகத்தான் நீதிபதி லோயா மரணமடைந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் இருந்து, நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மீது வெளிப்படையாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. தனிப்பட்ட பகைமைக்கு பழிதீர்த்து கொள்ளும் எண்ணத்துடன், அற்பத்தனமான, உள்நோக்கத்துடனும் இந்த பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதித்துறைக்கு மறைமுகமாக அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்துடனும், நீதித்துறை அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் மனுதாரர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மூத்த வழக்குரைஞர்களும், மனுதாரர்களின் வழக்குரைஞர்களுமான துஷ்யந்த் தவே, இந்திரா ஜெய்சிங், பிரசாந்த் பூஷண் ஆகியோர் நீதிபதிகளுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு, அவர்கள் இருவரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள், லோயா தொடர்பான வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் இருவருக்கும் தெரியும் என பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டார். இத்தகைய கருத்து கண்டிக்கத்தக்கது.

வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்களின் வழக்குரைஞர்கள், நீதிபதிகளுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்பதை மறந்து, கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்காக, மனுதாரர்களுக்கு எதிராக எங்களால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால், அதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அரசியல் பகைமைக்கு தேர்தலிலும், வணிகப் போட்டிக்கு சந்தைகளிலும்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அந்த பகை உணர்ச்சியை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றங்கள் உகந்த இடமில்லை. சட்டத்தை பாதுகாப்பதுதான் நீதிமன்றத்தின் பணியாகும்.

நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது; நீதித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவும், நீதித்துறை அலுவலில் தடையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும், இந்த உத்தரவின் மூலம் முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT