முகப்பு
இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்குரைஞருமான நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்குரைஞருமான நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
வரும் 7-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, அமலாக்கத் துறை சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தின.
இந்நிலையில் சில புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நளினி சிதம்பரம், அதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டார்.
பெண்களை வெளிமாநிலங்களுக்கு விசாரணைக்காக அழைக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்ட விதிகள் இருப்பதாக அவர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நளினி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்தச் சூழலில்தான், அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. வரும் 7-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகும்பட்சத்தில் நளினி சிதம்பரத்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →