செல்லிடப்பேசியில் தாமாக பதிவான ஆதார் உதவி எண்? மக்கள் குழப்பம்; ஆதார் ஆணையம் மறுப்பு
செல்லிடப்பேசியில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதாக ட்விட்டரில் வெளியான தகவல் உண்மையற்றது என்று ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செல்லிடப்பேசியில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதாக ட்விட்டரில் வெளியான தகவல் உண்மையற்றது என்று ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆதார் ஆணையத்தின் உதவி அலைபேசி எண் '1800-300-1947' தாமாக செல்லிடப் பேசியில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளார்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்து வந்தனர். ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை எனது அனுமதி இல்லாமல் எனது செல்லிடப்பேசியில் பதிவிட முடிந்தால், எனது செயல்களை கண்காணித்து, தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற வகையில் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், ஆதார் ஆணையம் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழயை உதவி எண் செல்லிடப்பேசியில் தாமாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதார் ஆணையம் சார்பாக எந்த ஒரு செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்திடமோ அல்லது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசியில் பதிவான உதவி எண் என குறிப்பிடப்படும் '18003001947' ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்களை செய்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் '1947' ஆகும்.
பொதுச் சேவை எண்கள் பட்டியலில் '18003001974' அல்லது '1947' என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.