முகப்பு
இந்தியா

வாஜ்பாயி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் மீண்டும் தாக்குதல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு பாஜக தலைமை அலுவலகம் வந்திருந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். 

Updated On : 17 ஆகஸ்ட், 2018 at 7:01 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:01 PM

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு பாஜக தலைமை அலுவலகம் வந்திருந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜகவினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல் வெள்ளிக்கிழமை இறுதி அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் வெள்ளிக்கிழமை மதியம் பாஜக தலைமை அலுவலகத்துக்கு 2 பேருடன் சென்றிருந்தார். 

அப்போது, அங்கிருந்த பாஜகவினர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், 

Advertisement

"கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கி நான் சென்று கொண்டிருந்த போது கட்சி நிர்வாகிகள் எனது பின் பக்கத்தில் இருந்து பாய்ந்து தாக்குதல் நடத்தினர். எனது ஆடைகளை கிழித்து, சுமார் 1 கிலோமீட்டர் வரை துரோகி என்று கோஷமிட்டு என்னை இழுத்து சென்றனர்.    

முன்னதாக, வாஜ்பாய் இல்லத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். இதுதொடர்பாக காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ்வர்தன் சிங்கிடம் பேசினேன். அவர் கட்சி அலுவலகத்துக்கு 11 மணி அளவில் வர சொன்னார். மேலும், ஐடிஓ வாயில் வழியாக வாருங்கள் எந்தவித சிரமமும் இருக்காது என்று உறுதியளித்தார்.  

இந்த நிகழ்வுக்கு பிறகு நான் அவரை அழைத்தேன். அவருடைய செயலாளர் அழைப்பை எடுத்து வெறும் அரை நிமிடம் தான் நான் பேசியதை கேட்டார். பாஜக சார்பில் யாரும் என்னை அழைத்து எந்தவித பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தவில்லை" என்றார். 

சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, சுவாமி அக்னிவேஷ் மீதுபாஜக இளைஞரணி மற்றும் மாணவரணியைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.