மேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
மேற்கு வங்கத்தில் பாஜக நடத்த உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கி அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக நடத்த உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கி அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"ஜனநாயகத்தை காப்போம்' என்ற பெயரில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் மூன்று இடங்களில் ரத யாத்திரைகளை நடத்த அக்கட்சி திட்டமிட்டது.
யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ரத யாத்திரையினால் மத வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது என்று கூறி மாநில அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. மாநில அரசின் உத்தரவை எதிர்த்து பாஜக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
Advertisement
இந்நிலையில் பாஜக ரத யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கி அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனி நீதிபதி தபோப்ரதி சக்கரவர்த்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
யாத்திரை நடப்பதற்கு 12 மணிநேரத்திற்கு முன்பு பாஜக குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் யாத்திரையின் போது சட்டம் ஒழுங்கை பேணுவது எளிதாக இருக்கும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.