வடகிழக்கில் தேர்தல் திருவிழா!
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக கோயில் திருவிழாவைப் போல் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக கோயில் திருவிழாவைப் போல் தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆளும் கட்சிக்கு அடிவயிற்றில் பதற்றத்தையும், இதர கட்சிகளுக்கு இதயத் துடிப்புகளை எகிற வைப்பதிலும் ஒவ்வொரு தேர்தலுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு.
இந்தியாவில் தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. அடுத்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தலும், இந்த ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மாநிலங்களிலும், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளன.
மேகாலயம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதிகம் அறியப்படாத அந்த மாநிலங்களைப் பற்றியும், எதிர்வரும் தேர்தல் குறித்தும் பார்ப்போம்.
திரிபுரா: மிக அழகான மாநிலங்களில் ஒன்று. மலைகளால் சூழப்பட்ட மாநிலம் என்பதால் இங்கு பழங்குடியினர் எண்ணிக்கையில் சற்று அதிகம். நாட்டிலேயே மூன்றாவது சிறிய மாநிலம். 2 பிரதிநிதிகள் மக்களவைக்கும், ஒரு பிரதிநிதி மாநிலங்களவைக்கும் அனுப்பி வைக்கிறது திரிபுரா.
இந்த மாநிலத்தின் மூன்று புறங்களையும் முஸ்லிம் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லைப்பரப்பு தொட்டுச் செல்கிறது.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 50 தொகுதிகளில் இடதுசாரி முன்னணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 49, இந்திய கம்யூனிஸ்ட் 1) வசம் உள்ளன. பாஜக வசம் 6 தொகுதிகளும், காங்கிரஸிடம் 3 தொகுதிகளும் உள்ளன.
கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இடதுசாரி முன்னணி அங்கு ஆட்சி செய்து வருகிறது. வங்க மொழி பேசுபவர்களே இங்கு அதிகம்.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள திரிபுராவில், ஹிந்துக்களே பெருவாரியாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் 8.6 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 4.35 சதவீதமும் உள்ளனர்.
மீண்டும் ஆட்சிக்கு வருமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?: இம்மாதம் 18-ஆம் தேதி இந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளத்திலும், திரிபுராவிலும் மட்டுமே இடதுசாரி கூட்டணி ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, திரிபுராவில் ஆட்சியை இழக்கக் கூடாது என்று உறுதியான நிலைப்பாட்டை இடதுசாரி கட்சிகள் கொண்டிருக்கும்.
திரிபுரா, வேளாண் தொழிலை பிரதானமாக நம்பியிருக்கிறது. அரிசி, உருளைக்கிழங்கு, கரும்பு, பருப்பு வகைகள் பிரதானமாக உற்பத்தி செய்யப்படும் இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு விவசாயிகளின் அமோக ஆதரவு தேவை என்பதில் சந்தேகம் இல்லை. விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டியது கட்டாயம்.
ஏழை முதல்வர்!: அந்த மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக (20 ஆண்டுகள்) மாணிக் சர்க்கார் தற்போது வரை பதவி வகித்து வருகிறார். இவர் ஏழை முதல்வர் என்று அழைக்கப்பட்டு வருபவர்.
அதாவது, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
வங்கமொழி பேசும் பெரும்பான்மையினருக்கும், திரிபுராவை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கும் இடையே 1997-ஆம் ஆண்டு வன்முறை மூண்டது. அதைத் தொடர்ந்து, ராணுவத்துக்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. திரிபுரா தேசிய விடுதலை முன்னணி , அனைத்து திரிபுரா புலிகள் படை (ஏடிடிஎஃப்) போன்ற அமைப்புகள் உருவாகி இந்தியாவிலிருந்து திரிபுராவை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும், இன்னமும் இந்தப் பிரச்னை அங்கே சன்னமாக ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. வங்கதேச எல்லையில் ஊடுருவல் பிரச்னையும் உள்ளது.
தடம் பதிக்குமா பாஜக?: திரிபுராவில் முக்கியமான பழங்குடியின கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்தது. திரிபுரா மக்கள் முன்னணி 9 இடங்களையும், இதர இடங்களில் பாஜகவும் போட்டியிடும் எனத் தெரிகிறது.
அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கியமான தலைவரான ஹிமந்த பிஸ்வசர்மாவை பாஜக தன்பக்கம் கொண்டுவந்தது. அங்கும், பழங்குடியின கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
ஹிமந்த விஸ்வசர்மா, திரிபுராவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் வியூகம் திரிபுராவில் வெற்றியை பெற்றுத் தருமா? குஜராத், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரிபுராவிலும் அக்கட்சி வெற்றி நடை போடுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
திரிபுராவின் சட்டப் பேரவை பதவிக்காலம் மார்ச் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேகாலயத்தில் மார்ச் 6, நாகாலாந்தில் மார்ச் 13 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைப் பதவிக் காலம் நிறைவடைகிறது. மேகாலயம், நாகாலாந்தில் இம்மாதம் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளன. மார்ச் 3 தேர்தல் முடிவுகள் வெளியாகும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை ரசீது மூலம் கண்டு உறுதிசெய்து கொள்வதற்கு பயன்படும் இயந்திரமும் இந்த 3 மாநிலத் தேர்தலில் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளன.
மேகாலயம்: மேகாலயம் என்றால் மேகங்களின் குடில் என்று பொருள். திரிபுராவைப் போன்ற மலைகள் சூழ்ந்த மாநிலம். ஆண்டு முழுவதும் மழை பொழியும் என்று படித்திருப்போமே அந்த சிரபுஞ்சி மேகாலயத்தில்தான் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் மாநிலம். இங்கு முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கிறிஸ்தவர்களை பெருவாரியாகக் கொண்ட இந்தியாவின் மூன்று மாநிலங்களில் ஒன்று மேகாலயம். 75 சதவீத மக்கள் கிறிஸ்தவர்கள். ஹிந்துத்துவத்தைப் பின்பற்றி வரும் பாஜக கனவில் கூட ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. அங்கு அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம். 60 சட்டப் பேரவைகளைக் கொண்ட மேகாலயத்தில் 55 இடங்கள் தனித் தொகுதி. அதாவது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவையாகும். கடந்த 2013-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளை பாஜக வென்றது. இங்கு கடந்த 1998-இல் 3 வெற்றிகளை அக்கட்சி ருசித்துள்ளது.
அந்த மாநிலத்தில் முக்கியமான கட்சிகளில் ஒன்றும், முன்னாள் மக்களவைத் தலைவரான மறைந்த பி.ஏ.சங்மா தோற்றுவித்த கட்சியுமான தேசிய மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியுடன் அங்கம் வகிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி கடந்த தேர்தலில் 33 இடங்களில் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 7 இடங்களை மட்டுமே தக்க வைத்தது. இந்த முறை அந்த மாநிலத்தை பாஜக குறிவைத்துள்ளது.
நாகாலாந்து: இந்த மாநிலத்தில் முதல்
வர் ஜீலியாங் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநில சட்டப் பேரவைக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் நாகாலாந்து ஜனநாயக முன்னணி 52 இடங்களை கைப்பற்றியது. நாகாலாந்தை தனிநாடாக பிரிக்க வேண்டும் என்று சில பயங்கரவாத அமைப்புகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தன. அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு அமைதி ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் கூறி பழங்குடியின அமைப்புகள் போராடி வருகின்றன. இதனால் அந்த மாநிலத்திலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாநில தேர்தல் முடிவுகளையும் நாடே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
- க.தி.மணிகண்டன்