இந்தியா

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான செயல் திட்டம் என்ன?: நீரவ் மோடிக்கு பிஎன்பி வங்கி கேள்வி

DIN

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆக்கப்பூர்வ செயல் திட்டத்தை அளிக்குமாறு தொழிலதிபர் நீரவ் மோடியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக நீரவ் மோடி மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிககளிடம் இருந்தும் 11,400 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் நீரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். நீரவ் மோடி மீதும், அவரது உறவினர் மெஹல் சோக்ஸி மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை நாடு கடத்தி தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதகாக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பிஎன்பி வங்கிக்கு அண்மையில் நீரவ் மோடி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். வங்கிக்கு தாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் ரூ.5,000 கோடிதான் என்றும், ஊடகங்கள் மற்றும் வங்கி நிர்வாகம் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகளால் தமது தொழில் முடங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பிஎன்பி வங்கி சார்பில் நீரவ் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
''பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதிச் சான்றினை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி நீங்கள் (நீரவ் மோடி) பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளீர்கள். மேலும், வாங்கிய கடனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக அளித்த உத்தரவாதத்தின்படியும் நீங்கள் செயல்படவில்லை. அதன் காரணமாகவே வங்கி சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

SCROLL FOR NEXT