முகப்பு
இந்தியா

கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றார்: இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம்

அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றதாக இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

Updated On : 28 பிப்ரவரி, 2018 at 7:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM

கடந்த 2007-ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. அதற்காக சில ஆதாயங்களை அவர் பெற்றதாகவும் புகார்கள் உள்ளன.

ஷீனா போரா கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீடு பெற்றது தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதனிடையே, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அமலாக்கத் துறையினரால் தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்ரவரி 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்றக்காவல் விதித்து அதை மேலும் 3 நாள்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், லண்டனில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்திராணி முகர்ஜி சிபிஐ-யிடம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு தங்களிடம் கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றதாக சிபிஐ விசாரணையில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவே இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை வைத்தது. இதன்பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.