முகப்பு
இந்தியா

எக்ஸ்ரே இயந்திரத்தை சாமர்த்தியமாக ஏமாற்றிய விமானப் பணிப்பெண் சிக்கினார்

விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதிக்கும் எக்ஸ்ரே இயந்திரத்தின் சோதனையில் மண்ணைத் தூவி ஹவாலா பணத்தைக் கடத்திய விமானப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 11 ஜனவரி, 2018 at 12:52 PM
பகிர்:

புது தில்லி: விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதிக்கும் எக்ஸ்ரே இயந்திரத்தின் சோதனையில் மண்ணைத் தூவி கடந்த 5 மாதங்களில் 8 முறை ஹவாலா பணத்தைக் கடத்திய விமானப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்குக்கு ஹவாலா பணத்தைக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா (25) என்பவர் இதுவரை ரூ.10 கோடி மதிப்புள்ள பணத்தை கடத்திச் சென்றிருப்பதாகவும், இதுவரை அவர் பிடிபட்டதே இல்லை என்பதும், தனது கைப்பையில் கூட பணத்தை வைத்துக் கடத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் கூறியிருப்பதாவது, தேவ்ஷி, இணையதளம் மூலமாக, எக்ஸ்ரே இயந்திரத்தில் ஒரு பொருளை காண்பிக்கக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தேடியுள்ளார். அதற்கு விடையும் கிடைத்துள்ளது. அதாவது, அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்படும் எந்த பொருளையும் விமான நிலையத்தில் செயல்படும் எக்ஸ்ரே இயந்திரம் கண்டறியாது என்பதே அதற்கான பதில்.

Advertisement

இதனை பரிசோதிக்கும் வகையில், முதல் கட்டமாக ஒரு சிறிய அளவிலான பணத்தை அவர் அலுமினியம் ஃபாயிலில் சுற்றி எடுத்துச் சென்றுள்ளார். அதனை விமான அதிகாரிகள் கண்டுபிடிக்காததால், தொடர்ந்து பெரிய தொகைகளை கடத்திச் சென்றுள்ளார்.

தேவ்ஷி தனது கைப்பையில் இருக்கும் ஆடைகள் மற்றும் மேக் அப் சாதனங்களுக்கு இடையே பணத்தை அலுமினியம் ஃபாயிலில் சுற்றி எடுத்துச் சென்றுள்ளார். கேட்டால் சாக்லெட் என்று கூறி விடுவாராம்.

இந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5மாதங்களில் 8 முறை ரூ.10 கோடி மதிப்புள்ள பணத்தை கடத்திச் சென்றிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 59 விமான நிலையங்களில் பணியாற்றும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், அலுமினியம் ஃபாயிலில் எதையாவது சுற்றி எடுத்து வந்தால், அது எக்ஸ்ரே இயந்திரத்தில் கருப்பாக தெரியும். ஒரு வேளை சந்தேகம் வந்து நாங்கள் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தால்தான் அதில் என்ன இருக்கிறது என்று தெரிய வரும் என்று கூறுகிறது.

தனது ஒவ்வொரு பயணத்துக்கும் தனக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும், ஒரு பயணம் முடிந்ததும் வெளிநாடுகளில் வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தனது கணவர், தனது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விடுவார் என்றும், அவருக்கு எங்கிருந்து, யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார். இது குறித்து தேவ்ஷியின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.