சில சமயங்களில் சினிமாவையும் விஞ்சி விடுகிறது உண்மைச் சம்பவம்.. அதில் இதுவும் ஒன்று
கற்பனைகளுக்கு அப்பாற்பட்டும் சில சம்பவம் வாழ்க்கையில் நடந்து விடுகின்றன. 25 வயதாகும் சல்லப்பள்ளி ஸ்ரவன் குமார் ரெட்டியின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருப்பதி: கற்பனைகளுக்கு அப்பாற்பட்டும் சில சம்பவம் வாழ்க்கையில் நடந்து விடுகின்றன. 25 வயதாகும் சல்லப்பள்ளி ஸ்ரவன் குமார் ரெட்டியின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருப்பதியைச் சேர்ந்த ரெட்டி ராணி என்ற பெண்ணுக்கு ஒரு பெரிய உண்மை தெரியவருகிறது, என்னவென்றால், தாங்கள் தேடிக் கண்டுபிடித்து மகன் என்று வளர்த்து வரும் ஸ்ரவன், 11 வயதாக இருந்த போது வீட்டை விட்டு ஓடிய சொந்த மகன் அல்ல என்பது.
அதுவும், ரெட்டி ராணியின் உண்மையான மகன் தனது அடையாளங்கள் அனைத்தையும் சொல்லி, வீட்டுக்குத் திரும்பியபோதுதான் இந்த உண்மை ராணிக்கு தெரிய வந்தது.
Advertisement
ஆனாலும் தாயன்புக்கு ஈடு இணை இருக்க முடியுமா? பெற்ற பிள்ளை இல்லை என்று தெரிந்தாலும், தாங்கள் தேடிக் கண்டுபிடித்த மகனை சட்டப்படி தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டனர் அந்த தம்பதியர்.
அவன் எங்கும் செல்ல வேண்டியதில்லை. எங்களுடனே வாழலாம் என்று ராணி உறுதியாகக் கூறிவிட்டார். அதே சமயம், இதுநாள் வரை கர்நாடக மாநிலம் தும்குரில் வசித்து வந்த ராணியின் சொந்த மகன் ஸ்ரவன் குமார், தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.
இத்தனை காலம், தன்னை பாதுகாத்து வளர்த்த தும்குரைச் சேர்ந்த பொறியாளருடன் தொடர்ந்து வாழவே சொந்த மகன் ஸ்ரவன் விருப்பம் தெரிவிக்கிறார்.
பிறகு, பெற்றோரைத் தேடி வரக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு தன்னை மணக்க விரும்பும் பெண்ணின் பெற்றோர், தனது உண்மையான பெற்றோர் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதாலேயே, ஸ்ரவன் சொந்த பெற்றோரைத் தேடி வந்துள்ளான் என்பது தெரிய வந்தது.
நாளை நான் தும்குருக்குச் சென்றுவிடுவேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எனக்கு தும்குரில் பல கடமைகள் உள்ளன. ஆனால், என் தாயும், உறவினர்களும் நான் அவர்களுடனே தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்கிறார் ஸ்ரவன்.
சம்பவம் பற்றி வளர்ப்பு மகன் கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே நான் உங்கள் மகன் இல்லை என்றுதான் கூறி வருகிறேன். ஆனால், அவர்கள் என்னை சொந்த மகனைப் போல பாசம் காட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார் என்று கூறுகிறார்.
ஒரே பெயரால் ஏற்பட்ட இந்த குழப்பம் 2009ம் ஆண்டு நிகழ்ந்தது. அதாவது, மண்டலோலபள்ளி கிராமத்தின் தலைவராக இருந்த சல்லப்பள்ளி ரகுநாதன் ரெட்டி தனது மனைவி ரெட்டி ராணியுடன் திருப்பதிக்குச் சென்றார். 2004ம் ஆண்டு வீட்டை விட்டு ஓடிய தங்கள் 11 வயது மகன் ஸ்ரவன் குமாரை பல ஆண்டுகளாக தேடி வந்த நிலையில், திருப்பதியில் ஒரு உணவு விடுதியில் 16 வயது சிறுவன் ஒருவனை பார்த்தனர்.
அவனைப் பார்த்ததும், தங்கள் மகன் சாயலில் இருப்பதாகத் தோன்றவே, இருவரும் அவனை அழைத்து விசாரித்தனர். அதில் அவன் பெயர் ஸ்ரவன் என்று கூறியதால், இவர்களுக்கு தங்கள் மகன்தான் என்று உறுதியானது. ஆனால், ஸ்ரவனோ, நான் உங்கள் மகன் இல்லை என்று மறுத்தும், ரகுநாதன் விடவில்லை. அவனை தங்களோடு அழைத்து வந்து விட்டனர்.
வெறும் பெயர் மட்டுமல்ல, அவனது வயது, தோற்றம், அங்க அடையாளங்களும் சொந்த மகனை ஒத்து இருந்தது. அதே சமயம், சொந்த மகன் காணாமல் போன சமயத்தில் இருந்துதான் அவனும் அந்த உணவு விடுதியில் வேலை செய்து வருகிறான் என்பதால் அவன்தான் சொந்த மகன் என்று நம்பியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த தம்பதியின் சொந்த மகன் நான் இல்லை என்று கூறியும் விடாததால் பல முறை வீட்டை விட்டுத் தப்பியோட முயன்றும் முடியாமல், இவர்களது அளவற்ற அன்புக்கு அடிமையாகி இங்கேயே இருந்துவிட்டேன் என்கிறார் வளர்ப்பு மகன் ஸ்ரவன்.