சாம்சங் செல்போன் தொழிற்சாலை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் - மோடி
நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உலகின் மிகப் பெரிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான, தொடக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் திங்கள்கிழமை கலந்துகொண்டனர். இந்த தொடக்க விழாவில் மோடி பேசியதாவது,
"இந்த தொழிற்சாலையின் வளர்ச்சி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை துரிதப்படுத்தும். இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதார கொள்கை மட்டுமின்றி தென் கொரியா போன்ற நாடுகளுடனான நல்லுறவையும் உறுதிபடுத்துகிறது.
இந்த 5,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் இந்தியா, சாம்சங் இடையிலான வணிக உறவு மட்டுமின்றி இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவையும் வலுப்படுத்தும். அரசு மின்னணு சந்தை மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை அரசு நேரடியாக பெறுகிறது. இது நடுத்தர மற்றும் சிறு தொழில் துறையினருக்கு பலனளிக்கும். மேலும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவந்துள்ளது.
Advertisement
ஜூன் மாதம் மட்டும் பீம் செயலி மூலம் 41,000 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பீம் செயலியை மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்துவது, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும்.
பிறகு, வர்த்தக பிரதிநிதகளிடம் நான் எப்போது பேசினாலும், கொரிய பொருட்கள் இல்லாத நடுத்தர வர்க வீட்டை இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறுவேன்.
இந்த தொழிற்சாலை மூலம் 1 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு நிச்சயம் அது ஊக்கம் தரும். தென் கொரியாவின் தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் இந்தியாவின் உற்பத்தி நிபுணத்துவ உதவியுடன் இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் வலுவடையும்.
இன்றைய சூழலில் சாம்சாங் தான் தொழில்நுட்பத்தில் உலக தலைவனாக செயல்படுகிறது. இந்தியாவில் 40 கோடி ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டில் உள்ளது. 32 கோடி மக்கள் பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். மலிவான விலையில் இணைய சேவை கிடைக்கிறது. ஃபைர் இணைய சேவை கிராமப்புறங்களையும் சென்றடைய தொடங்கியுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 70,000 பேருக்கு வேலை வழங்கியுள்ளது. 2014-ஐ காட்டிலும் தற்போது செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.