இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.1,484 கோடி செலவு: இதுவரை 84 நாடுகளுக்கு பயணம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வெளிநாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு ரூ.1,484 கோடி செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், பிரதமர் மோடி இதுவரை 84 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேகாலக்கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 42 முறை மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.
கடந்த 2015-16ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக 24 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18ஆம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார்.
பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.
2018-19ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்தும் விரிவாக குறிப்பிடப்படவில்லை. வெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்கு மொத்தம் ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மட்டும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT