நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்களுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதாவது, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றுக் கொண்ட மற்ற எம்எல்ஏக்களை விட, குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
குற்றப்பின்னணி கொண்ட 77 எம்எல்ஏக்களில் 44 பேர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், குற்றப்பின்னணி இல்லாத 145 எம்எல்ஏக்களில் வெறும் 55 பேர் மட்டுமே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
மே 12ம் தேதி நடந்த தேர்தலில் 222 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். இவர்களில் 49 பேர் எந்த குற்றப்பின்னணியும் இல்லாத வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேர் மட்டுமே கடும் போட்டியுடன் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.
இவர்களில், குற்றப்பின்னணி கொண்ட டாக்டர் அஷ்வத் நாராயண், 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படி குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.