இந்தியா

காஷ்மீர் மக்களைக் காக்கவே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை: அருண் ஜேட்லி

DIN

காஷ்மீரில் பொதுமக்களைக் காக்கும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முட்டுக்கட்டை போடுவதால் மெஹபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அங்கு பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து அருண் ஜேட்லி கூறியதாவது:
தங்களை அழித்துக் கொண்டு மற்றவர்களையும் கொல்லத் துடிக்கும் பயங்கரவாதிகளிடம் நாம் சத்தியாகிரகம் பற்றி பேசிக் கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதிகள் சரணடைய மறுப்பதுடன், அரசு அறிவித்த சண்டை நிறுத்தத்தையும் ஏற்கவில்லை. சட்டத்தைக் கையில் எடுத்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது அடக்குமுறை ஆகாது. அரசு காஷ்மீரில் மக்களைக் காக்கும் தனது கடமையைத்தான் செய்து வருகிறது.
நாம் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்றுதான் அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் நினைக்கிறார்கள். ஆனால், பயங்கரவாதிகள் தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதுடன், அப்பாவி பொதுமக்களின் உயிர்களையும் பலி வாங்கி வருகின்றனர். காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக வாழவே விரும்புகிறார்கள். ஒரு சிலர்தான் வன்முறையைத் தூண்டி விடும் வேலையைச் செய்கின்றனர். இவர்களின் தூண்டுதல்களுக்கு அப்பாவி இளைஞர்கள் இரையாகி வருகின்றனர்.
பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியை வைத்து சுடும்போது, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லை எதிர்த்து தாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தேசவிரோத நோக்கத்துடன் ஆயுதம் எடுப்பவர்களிடம் கூட அரசு முதலில் பேச்சு நடத்தவும், ஆயுதங்களைக் கைவிடவுமே வாய்ப்பு அளிக்கிறது.
காஷ்மீர் மக்களைக் காப்பதுதான் அரசின் கொள்கை. ஒவ்வொரு இந்தியரின் மனித உரிமையும் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மக்களை மனிதர்களாக மதிக்காத பயங்கரவாதிகளை மட்டுமே அரசு ஒடுக்கி வருகிறது. காஷ்மீரில் மட்டுமல்ல நக்ஸல் ஆதிக்கமுள்ள பகுதிகளிலும் தீய சக்திகள் முழுமையாக ஒடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT