ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 8 வயது சிறுமி, வெறும் வயிற்றில் தொடர்ந்து போதை மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோமா நிலைக்குச் சென்ற கதுவா சிறுமியை குற்றவாளிகள் கொன்று வீசியுள்ளனர் என்று அவரது உடல் உள்ளுறுப்பு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், 7 நாள்களுக்குப் பிறகு அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சிறார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் உள்ளுறுப்புகள் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரை தொடர்ந்து மயக்கநிலையில் வைத்திருக்க சில மாத்திரைகளை கொடுத்துள்ளனர். சாப்பாடு ஏதுமின்றி தொடர்ந்து வெறும் வயிற்றில் மாத்திரை கொடுத்ததால், அச்சிறுமி கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
கதுவா சிறுமிக்கு, குற்றவாளிகள் எபிடிரில் 0.5 எம்ஜி மாத்திரைகள் மற்றும் கன்னபிஸ் எனப்படும் போதை மருந்தையும் அளித்துள்ளனர்.
அதாவது, அவரது உடல் எடை 30 கிலோ என்று எடுத்துக் கொண்டால், அவருக்கு வழங்கப்பட்ட மாத்திரை 0.1 முதல் 0.2 எம்ஜிஎஸ் ஆக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 2018ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி முதல் தினமும் அவருக்கு 0.5 எம்ஜி அளவுக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
அதிக மாத்திரை காரணமாக, அவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்துள்ளார். குழப்பமான, உடல் ஒத்துழைக்காத தன்மை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்பட்டு இறுதியாகக் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
கோமா நிலையில் இருந்த கதுவா சிறுமியை, குற்றவாளிகள் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
உணவு ஏதுமின்றி, தொடர்ந்து மாத்திரை மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்ததால், சிறுமி கோமா நிலைக்குச் சென்றதாக, மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
முன்னதாக, சிறுமி தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படும் போதும், கொலை செய்ய தாக்கிய போதும் கதுவா சிறுமி, உதவி கோரி கத்தி கூக்குரலிடாதது குறித்து கேள்வி எழுப்பி, குற்றவாளிகளின் தரப்பு வழக்குரைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளியை பரப்பி வந்தனர்.
இந்த வாதத்தை தவிடுபொடியாக்கவே, கதுவா சிறுமியின் உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்தைக் கேட்க குற்றவியல் காவல்துறையினர் முடிவு செய்து அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.