இந்தியா

ஆதார் தகவல்களை ஒருபோதும் திருட முடியாது! உச்ச நீதிமன்றத்தில் யுஐடிஏஐ திட்டவட்டம்

தினமணி

ஆதார் தகவல்களை ஊடுருவித் திருட வேண்டுமானால் உலகின் ஒட்டுமொத்த வல்லமையும் தேவைப்படும் என்றும் அது சாத்தியமற்ற ஒன்று என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 மின்னணு காட்சி முறை (பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்) மூலம் ஆதார் தொடர்பான நடைமுறைகளை அந்த ஆணையத்தின் தலைவர் அஜய் பூஷண் பாண்டே நீதிமன்றத்தில் எடுத்துரைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
 பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
 இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆதார் தொடர்பான நடவடிக்கைகளை பவர் பாயிண்ட் முறையில் விளக்கமளிக்க அனுமதிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 அதை ஏற்ற நீதிபதிகள், வியாழக்கிழமை அத்தகைய விளக்கத்தை அளிக்க அனுமதியளித்தனர்.
 இதையடுத்து நீதிமன்ற விசாரணை அறையில் இரண்டு பெரிய எல்சிடி திரைகளும், ஒளிப் பட சாதனங்களும் (புரொஜக்டர்) பொருத்தப்பட்டன. அவற்றில் ஒரு திரை பழுதாகிவிட்டதால், மற்றொன்றின் மூலமாக நீதிபதிகளுக்கு யுஐடிஐஏ தலைவர் அஜய் பூஷண் பாண்டே விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுவான அடையாள ஆவணங்கள் எதுவும் மக்களுக்கு இல்லை. சிறிய கிராமத்தில் இருந்து வந்து அரசுத் துறையில் பெரிய பொறுப்பை வகித்து வரும் என்னிடம் கூட அப்போது ஆவணம் இல்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் சேவைகளையும், மானியங்களையும் எளிமையாக மக்கள் பெறுவதற்கு அதன் மூலம் வகை செய்யப்பட்டது. அதைத் தவிர, சரியான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதும் ஆதார் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
 இத்தகைய சிறப்புகள் அதில் இருந்தாலும், மறுபுறம் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. மக்களின் கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகிய விவரங்கள் தவறாகக் கையாளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 ஆதார் தகவல்கள் அனைத்தும் "2048 பிட் மறையாக்க கட்டமைப்பின்' கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளதோ, அதைக் காட்டிலும் 8 மடங்கு கூடுதல் பாதுகாப்பு ஆதார் தகவல்களுக்கு இருக்கிறது. அத்தகைய கட்டமைப்புக்குள் ஊடுருவி தகவல்களைத் திருட வேண்டுமாயின் உலகின் மொத்த வல்லமையும் தேவைப்படும் என்றார் அவர்.
 அஜய் பாண்டேவின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் சிலவற்றுக்கு அவர் அளித்த பதிலை நீதிபதிகள் ஏற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT