இந்தியா

பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது

தினமணி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிட்டது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 மைசூரில் உள்ள மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று அவர் பேசியது: பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு பயனும் ஏற்படவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் இன்னலைச் சந்திக்க நேர்ந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல பொருளாதார அறிஞர்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தனர். இதையெல்லாம் பொருள்படுத்தாமல் பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது.
 வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, கடந்த நான்கு ஆண்டுகளில் செய்ததுதான் என்ன? இதுவரைக்கும் ஒரு பைசா பணத்தைக்கூட பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வழங்கவில்லை.
 90 சதவீத கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொழிலதிபர்கள், மனைத் தொழிலர்கள், தங்க வியாபாரிகள்தான். இவர்களில் பெரும்பாலானோர் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்குப் பதிலாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கியது ஏன்?
 பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை ஒரே நாடு, ஒரே கொள்கை என்பதாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கை பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவாகும். இங்கு மக்களிடையே உள்ள மத நம்பிக்கைகள் அனைத்தையும் கெüரவிக்கிறோம். அதற்கு பங்கம் விளைவிக்கும் முயற்சியை எதிர்க்கிறோம்.
 முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் மக்களைத் துன்புறுத்தும் எந்தத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்றார் அவர்.
 மாணவி ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறுகையில், எனது தந்தை ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கும், எனது சித்தப்பா சஞ்சய் காந்தி விமான விபத்திலும், எனது பாட்டி இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டார். இவை அனைத்தும் தெரிந்தும், எனது தாய் என்னை அரசியலில் ஈடுபட வைத்தார். ஒருவேளை எனது தந்தை அல்லது சித்தப்பா உயிரோடு இருந்திருந்தால்,நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்றார் அவர்.
 முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் டி.கே.சிவக்குமர், எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT