பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா: அறிவிக்கை வெளியீடு
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு, அவர்களுக்கு வரி பிடித்தமின்றி ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறுவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு, அவர்களுக்கு வரி பிடித்தமின்றி ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறுவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள், துறைமுகங்கள், ரயில்வே நிறுவனங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் வகையில், கடந்த 1972-ஆம் ஆண்டு பணிக்கொடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டப்படி ஒரு தொழிலாளர் பலன்பெற வேண்டுமெனில், அவர், ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் குறைந்தது 10 பேராவது பணியாற்ற வேண்டும். அந்தத் தொழிலாளர் ஓய்வுபெற்ற பிறகு ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு, அவருக்கு பணிக்கொடை வழங்கப்படும். தற்போதைய நிலையில், ஒரு தொழிலாளர் பணி ஓய்வுக்குப் பிறகு ரூ.10 லட்சம் வரை வரி பிடித்தமின்றி பணிக்கொடை பெற முடியும். இந்த நிலையில், ஒரு தொழிலாளர் ரூ.20 லட்சம் வரை வரி பிடித்தமின்றி பணிக்கொடை பெறும் வகையில், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.