முகப்பு
இந்தியா

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

Updated On : 15 மே, 2018 at 12:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத் திட்டங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
வழக்கம்போல், இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பில் 15 பேரும், 12-ஆம் வகுப்பில் 49 பேரும் 99 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நாடு முழுவதும் உள்ள 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 1,80,880 பேர் எழுதினர். அவர்களுக்கு 14 இந்திய மொழிகள், 5 அயல் மொழிகள், 2 தொன்மையான மொழிகள் உள்பட 48 பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதேபோல், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 2,161 பள்ளிகளைச் சேர்ந்த 1,83,387 மாணவ, மாணவிகள் எழுதினர். அவர்களுக்கு 22 இந்திய மொழிகள், 10 அயல் மொழிகள், ஒரு தொன்மையான மொழிப் பாடம் உள்பட 61 பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 12-ஆம் வகுப்பில் 99.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று 7 பேர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 99.25 சதவீத மதிப்பெண்களுடன் 17 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று 25 பேர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனர்.
10-ஆம் வகுப்பில் மும்பையைச் சேர்ந்த ஸ்வயம் தாஸ் என்ற மாணவர் 99.4 சதவீத மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜலந்தரைச் சேர்ந்த ஜாஸ்மின் கெளர் சஹல், மும்பையைச் சேர்ந்த அனோகி அமித் மேத்தா ஆகிய இருவரும் 99.2 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 99 சதவீத மதிப்பெண்களுடன் 12 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
10, 12 ஆகிய இரு வகுப்புகளிலும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஐஎஸ்சி கவுன்சிலின் தலைமைச் செயல் அலுவலர் ஜெர்ரி அரத்தூண் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.