முகப்பு
இந்தியா

ஒளரங்காபாத் கலவரத்துக்கு மாநில உள்துறையின் தோல்வியே காரணம்: சிவசேனை

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாதில் நிகழ்ந்த கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று எனவும், மாநில உள்துறை தோல்வியின் காரணமாகவே அக்கலவரம் நிகழ்ந்ததாகவும் சிவ சேனை விமர்சித்துள்ளது.

Updated On : 15 மே, 2018 at 12:24 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாதில் நிகழ்ந்த கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று எனவும், மாநில உள்துறை தோல்வியின் காரணமாகவே அக்கலவரம் நிகழ்ந்ததாகவும் சிவ சேனை விமர்சித்துள்ளது.
ஒளரங்காபாதில் கடந்த சனிக்கிழமை இரு சமூகத்தினரிடையே நிகழ்ந்த மோதலால் கலவரம் மூண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். வழிபாட்டுத் தலம் ஒன்றில் இருந்த சட்டவிரோத குடிநீர் இணைப்பை அகற்றியதே கலவரத்துக்கு தூண்டுதலாக அமைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக சிவசேனை கட்சியின் பத்திரிகையான "சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
ஒளரங்காபாத் கலவரம் மத ரீதியிலானதே தவிர, இரு பிரிவினரிடையே நிகழ்ந்தது அல்ல. கலவரம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதன் மூலமாக, இது திட்டமிடப்பட்ட கலவரம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கலவரத்தின் மூலமாக, முதல்வர் தலைமையிலான மாநில உள்துறை அமைச்சகத்தின் தோல்வி தெரியவந்துள்ளது. மிகவும் பதற்றம் மிக்க பகுதிகளில் ஒன்றாக அறியப்பட்ட போதிலும், கடந்த சில காலமாகவே ஒளரங்காபாத் காவல்துறை ஆணையர் பொறுப்பு காலியாகவே உள்ளது. ஒருவேளை, பாஜக ஆதரவு ஐபிஎஸ் அதிகாரியை அப்பொறுப்பில் நியமிக்க முதல்வர் காத்திருக்கிறாரோ?
சட்டவிரோத குடிநீர் இணைப்பை அகற்றிய சம்பவமானது, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கலவரத்தை தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதுபோன்ற கலவரங்கள் மாநிலத்தில் பாதுகாப்பு அமைப்பு சீர்குலைந்துள்ளதற்கு சான்றாகும். கடந்த ஜனவரியில் புணேயில் தலித்துகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறை, அகமது நகர் பகுதியில் இரட்டைக் கொலை ஆகியவை நிகழ்ந்த சூழலில், தற்போது இந்தக் கலவரம் மகாராஷ்டிரத்தின் மதிப்பை மேலும் பாதித்துள்ளது.
இத்தகைய நிலையிலும், சூழல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் கூறி வருகிறார். 
இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்படும் உயரதிகாரம் மிக்க குழுக்களால் எந்த பலனும் இல்லை. ஒரு சந்தைப் பகுதி முழுவதற்குமே கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இவையெல்லாம், மகாராஷ்டிரத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒளரங்காபாத் கலவரம் மத ரீதியிலானதா என்பதை கண்டறிய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.