பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அளிப்பு
மத்திய அமைச்சரவையில் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள அருண் ஜேட்லி வகித்து வந்த நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர்
மத்திய அமைச்சரவையில் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள அருண் ஜேட்லி வகித்து வந்த நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் பதவி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானியிடம் இருந்த செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பதவி, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ரத்தோர், செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பொறுப்பையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேட்லிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அவர் குணமடைந்து வீடு திரும்ப மேலும் பல நாள்கள் ஆகும் என்பதால் அவர் வசமிருந்த நிதியமைச்சகப் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ் அலுவாலியா, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். குடிநீர் மற்றும் வடிகால் வசதித் துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அல்போன்ஸ் கண்ணந்தானம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சுற்றுலாத் துறை இணையமைச்சராகத் தொடர்வார்.