முகப்பு
இந்தியா

மார்க்சிஸ்டுகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற வேண்டும்: சீதாராம் யெச்சூரி 

சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக் கொள்பவர்களே உண்மையான மார்க்சிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

Updated On : 14 மே, 2018 at 5:42 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக் கொள்பவர்களே உண்மையான மார்க்சிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
"இந்தியா மற்றும் ஆசியாவில் மார்க்சியம்' என்ற தலைப்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெற்றது. அதில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
சூழ்நிலைகளின் மீதான ஆய்வை அடிப்படையாகக் கொண்டதே மார்க்சியமாகும். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாறும் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். என்னைப் பொருத்த வரையில் அவ்வாறு மாறாதவர்கள் மார்க்சிஸ்டுகளே அல்ல.
பகுத்தறிவு மீதான தாக்குதலானது, சமூக ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் சிலருக்கும், முசோலினி ஆட்சியில் இருந்த கருப்புச்சட்டை படையினருக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
சமூக ஒழுங்கு மீதான இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக, சித்தாந்த ரீதியாக பதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுபோன்ற சக்திகளுக்கு எதிராகப் போராட தலித்துகளும், இடதுசாரிகளும் இணைந்துள்ளனர். பொருளாதார சுரண்டல்கள், அடிப்படைவாத எழுச்சி, அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஆகிய சவால்களை மார்க்சியமே எதிர்த்துப் போராட இயலும் என்று சீதாராம் யெச்சூரி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.