முகப்பு
இந்தியா

மோடி ஆட்சியை அகற்றுவதே காங்கிரஸின் நோக்கம்: ஏ.கே.அந்தோணி

மோடி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதுதான காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

Updated On : 21 மே, 2018 at 11:58 PM
பகிர்:

மோடி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதுதான காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அறிவியல், தகவல்தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை என பல்வேறு நிலைகளில் இந்தியா இப்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும்தான் காரணம். ராஜீவ் அன்று ஊன்றிய விதை, இப்போது நமக்கு மரமாக வளர்ந்து பலனளித்துக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தது மிகப்பெரிய தவறு. கர்நாடகத்தில் மக்களின் ஆதரவைப் பெறாத காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இருப்பதாக பாஜக கூறுவது பொய். பாஜக பெற்ற வாக்களைவிட காங்கிரஸ் -மஜதவுக்கு அதிக வாக்குகளே கிடைத்துள்ளன. மேலும், பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களும் இந்தக் கூட்டணியில் உள்ளனர்.
மோடியின் உத்தரவின் பேரில்தான் அரசமைப்புச் சட்டத்தை மீறி, எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் மோடி- அமித் ஷா கூட்டணியின் கொள்கையாக உள்ளது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்தை விளைவிக்கும். இத்தகைய மத்திய ஆட்சியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுதான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் 6 மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு செயல்பட்டனர். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.