இந்தியா

சபரிமலை: அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி: தீர்ப்பை செயல்படுத்துவதில் கேரள அரசு உறுதி 

DIN


சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு வியாழக்கிழமை நடைபெற்ற கேரள அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. இக்கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் கேரள அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள், சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கின்றன; ஆதலால் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதுவரை கேரள அரசு செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தின.
இதைக் கேட்ட முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆதலால் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை கேரள அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் முடிவில் பினராயி விஜயன் உறுதியாக இருந்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாஜகவும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. எனவே சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம், எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.
கூட்டத்துக்குப் பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அரசு பிடிவாதமாக இருக்கவில்லை; எனினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. உச்சநீதிமன்றம் நாளை வேறு விதமான தீர்ப்பை வெளியிடும்பட்சத்தில், அதையும் கேரள அரசு செயல்படுத்தும். அதேவேளையில் பக்தர்களுக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும். இதுகுறித்து பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். அனைத்து பக்தர்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மட்டுமே அரசு கட்டுப்படும். இதை அனைத்து பக்தர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கேரள சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. எந்த சமரசத்துக்கும் அரசு தயாராக இல்லை என்றார்.
பாஜக மாநில தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. எங்களது நேரம் வீணாகிவிட்டது என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையடுத்து, சுமார் 2 மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும். இக்கால கட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பெண்கள் கோயிலுக்கு வழிபாடு நடத்த வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் கோயில் நடை திறக்கப்பட்டபோது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT