வட இந்தியர்கள் வேலையை நிறுத்தினால் மும்பை ஸ்தம்பிக்கும்
மும்பை மாநகரில் உள்ள வட இந்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நகரமே ஸ்தம்பித்துவிடும்; மும்பையில் இருப்பவர்களுக்கு உணவு கூட கிடைக்காது என்று
மும்பை மாநகரில் உள்ள வட இந்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நகரமே ஸ்தம்பித்துவிடும்; மும்பையில் இருப்பவர்களுக்கு உணவு கூட கிடைக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
மும்பை நகர காங்கிரஸ் தலைவராகவும் உள்ள நிருபம், நாகபுரியில் வட இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். பாஜக மூத்த தலைவர் சத்ருஹன் சின்ஹாவும் பங்கேற்றார்.
மகாராஷ்டிரத்தில் மாரத்திய மக்களுக்கு முன்னுரிமை கொள்கையுடனும், மாநிலத்தில் தங்கி பணியாற்றி வரும் வட இந்தியர்களுக்கு எதிரான போக்குடன் அரசியல் நடத்தி வரும் சிவசேனை, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) ஆகிய கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் சஞ்சய் நிரூபம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
மும்பை நகரின் மக்களின் சுமைகள் அனைத்தையும் வட இந்திய தொழிலாளர்கள்தான் தங்கள் தோள்களில் சுமந்து வருகின்றனர். மேலும், வட இந்திய மக்கள் எப்போதும் மும்பை நகர் குறித்தும் மகாராஷ்டிரம் குறித்தும் நன்றியுணர்வுடன் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் வேலையை நிறுத்தினால், மும்பை நகரமே ஸ்தம்பித்துவிடும். மும்பை மக்களுக்கு சரியான உணவு கூட கிடைக்காது. மும்பையில் உள்ள வட இந்தியர்களை அதுபோன்ற ஒரு நிலைக்கு யாரும் தள்ளக் கூடாது என்று நான் எச்சரிக்கிறேன்.
மும்பையில் ஆட்டோ, டாக்ஸி, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவது முதல், பால், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், நாளிதழ் விநியோகம் என அனைத்து பணிகளையும் வட இந்தியர்கள்தான் செய்து வருகின்றனர். சில நேரங்களில் மும்பையில் இந்த அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் தடை பட்டுள்ளது; அது நடந்திருக்கக் கூடாது. வட இந்தியர்களை அப்படிப்பட்ட நிலைக்கு உள்ளாக்கவும் கூடாது என்றார் அவர்.
சிவசேனை, எம்என்எஸ் பதிலடி: சிவசேனை எம்.பி ராகுல் ஷிவ்லே இது தொடர்பாக கூறுகையில், காங்கிரஸ் கட்சியால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. வரும் தேர்தலில் மும்பை மக்கள் காங்கிரஸுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
எம்என்எஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், காங்கிரஸுக்கு இதனை நான் ஒரு சவாலாகவே கூறுகிறேன். முடிந்தால் அவர்கள் கூறுபவர்களை வைத்து மும்பையை ஸ்தம்பிக்க வைக்கட்டும் என்றார். இதனிடையே, சமூக வலைதளங்களில் சஞ்சய் நிருபத்தை எம்என்எஸ் தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.