காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
காயம் ஆறுவதற்குள் ஒரு மாதம் காத்திருந்து சிறுவனை கொலை செய்து பழிதீர்த்த கும்பல் குறித்து...
சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, காயம் ஆறுவதற்குள் ஒரு மாதம் காத்திருந்து சிறுவனை கொலை செய்து பழிதீர்த்த கும்பல் குறித்து மதுரை விளக்குத்தூண் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குபேந்திரன் என்ற 17 வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
சித்திரை திருவிழாவின்போது மோதல்
இதில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின்போது கொலையுண்ட சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக்கொண்டதில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் ஆறுவதற்குள் கொலை செய்ய திட்டம்
இதனால் ஆத்திரமடைந்த தொத்தல் முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர்.
5 பேர் கொண்ட கும்பல் கொலை
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நின்றபோது அங்கு 2 இருசக்கர வாகனங்களில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது குபேந்திரன் ஓட முயற்சித்தபோதும் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்ததை முடிவு செய்த பின்னர் அந்த கொலை கும்பலானது அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த விளக்குத்தூண் காவல்துறையினர், கொலை செய்துவிட்டு தப்பியோடி கும்பலை தேடி வருகின்றனர்.
சட்டவிரோத செயல்கள் நடக்கிறது
வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கார் பார்க்கிங்கில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக எடுக்கப்பட்ட கடைகளில் சமூக விரோத கும்பல்களை இரவில் தங்க வைப்பதாகவும், தொடர்ந்து அந்த பகுதியில் மது அருந்துவது, போதை பொருள்கள் பயன்படுத்துவது என பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் இதனால் நாள்தோறும் இரவு நேரத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
எனவே, காவல்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே கார் பார்க்கிங்கில் இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொலையுண்ட சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
Why Was the Boy Murdered After Lying in Wait? - Vilakkuthoon Police Investigation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.