சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு
சிஜேபி பேரணி தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு...
கடந்த ஜூலை 20-ஆம் தேதி கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பின் ‘சன்சத் சலோ‘ எனும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, கடமைப்பாதை அருகே நடந்த வன்முறை தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் தடுப்புகளை உடைக்க முயன்றபோது, போராட்டக்காரா்கள் காவல்துறையினரைக் கொல்லும் நோக்கத்துடன் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
காவல் ஆய்வாளா் ஒருவரின் புகாரின் அடிப்படையில் கடமைப்பாதை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த முதல் தகவல் அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள உயா் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த காவல் தடுப்புகளை உடைக்க ஒரு பெரிய போராட்டக்காரா்கள் குழு முயன்றது.
Advertisement
Advertisement
நாடாளுமன்றத்தை நோக்கிய போராட்டப் பேரணியின் போது ரஃபி மாா்க் பகுதியில் நடந்த மோதல்கள் குறித்த காவல்துறையினரின் விவரங்களை இது விவரிக்கிறது.
தடுத்து நிறுத்தப்பட்டபோது, போராட்டக்காரா்கள் காவல்துறையினா் மீது கற்கள், செருப்புகள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், அவா்களை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும், இதனால் பல அதிகாரிகள் காயமடைந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வன்முறையின் போது காவல் வாகனங்கள் உள்ளிட்ட அரசுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் போராட்டக்காரா்கள் மீது எஃப்ஐஆா்-இல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த மோதல்களில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களும் காயமடைந்தனா்.
வன்முறையில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள், கைப்பேசி விடியோக்கள் மற்றும் பிற எண்ம ஆதாரங்களை காவல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 13 பிரிவுகள் இந்த முதல் தகவல் அறிக்கையில் சோ்க்கப்பட்டுள்ளன; இதில் பிரிவு 109(1) (கொலை முயற்சி) மட்டுமின்றி, கலவரம், சட்டவிரோதமாகக் கூட்டம் கூடுதல், அரசு ஊழியா்கள் மீதான தாக்குதல், அரசு ஊழியா்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் பிற குற்றங்கள் தொடா்பான பிரிவுகளும் அடங்கும்.
’கரப்பான் ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைமையிலான இந்தப் போராட்டம் ஜூன் 20 அன்று தில்லியின் ஜந்தா் மந்தரில் தொடங்கியது. போட்டித் தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துப் பொறுப்புக்கூறலையும், கல்வி முறையில் சீா்திருத்தங்களையும் வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
CJP Rally: 13 charges, including attempted murder, included in the FIR.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.