இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு: பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அவதூறு வழக்கு 

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய  பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர்அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.   

PTI

புது தில்லி: தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய  பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.  

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இதற்கு முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஊடகத் துறையில் அவர் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே.அக்பர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில், அவர் அரசு முறை பயணமாக நைஜீரியாவுக்கு சென்றிருந்தார். அவர், இந்தியாவுக்கு திரும்பியவுடன் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகிவந்தன. 

இதையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அவர் வெளியிட்ட   அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது. அனைத்தும் சித்தரிக்கப்பட்டது. அடிப்படை ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டுகள்.     

என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.  

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய  பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். 

அவர் மீது 12 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்தார்கள். அவர்களில் முதலில் குற்றச்சாட்டு கூறியவரான ப்ரியா ரமணி மீது மத்திய அமைச்சர் அக்பர்  தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தனிப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். 

ப்ரியா ரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் உள்நோக்கத்துடன் இத்தகைய புகார் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT