இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள்; ஒரு போலீஸ்காரர் பலி

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸார் ஒருவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீநகரின் ஃபதே கதல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் சிஆர்பிஎஃப் படையினரும், போலீஸாரும் புதன்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த வீட்டை உடைத்து கொண்டு பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீது வீட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடவே, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 3 பயங்கரவாதிகள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு தப்பியோடினர். அப்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 3 பேரும் உயிரிழந்தனர். சண்டையில் போலீஸார் ஒருவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும், மெஹ்ரதீன் பங்ரூ, பஹத் வாஸா, ரயீஸ் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பங்ரூ, லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு பயங்கரவாத அமைப்பின் தளபதி ஆவார். ஏராளமான தாக்குதல்களில் தொடர்புடைய அவரை, பாதுகாப்புப் படையினர் நீண்டகாலமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதேபோல், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மற்றோர் பயங்கரவாதி ரயீஸ், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன் ஆவார். பயங்கரவாத அமைப்பின் கீழ்நிலை ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார்.
சண்டையில் வீரமரணமடைந்த போலீஸாரின் பெயர் கமல் கிஷோர் ஆகும். அவரது உடலுக்கு ஸ்ரீநகரில் உள்ள மாவட்ட தலைமை காவல் அலுவலத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊருக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சண்டையைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டது. செல்லிடப் பேசி இணைய சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பாதுகாப்புப் படையினருடன் கைகலப்பு: இதனிடையே, துப்பாக்கி சண்டை குறித்த தகவல் வெளியானதும், ஸ்ரீநகரின் பல இடங்களில் பாதுகாப்புப் படையினர் மீது பொது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம் பதான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 2 போலீஸார் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT