முகப்பு
இந்தியா

இந்தியா-மியான்மர் எல்லையில் தங்கம் கடத்துவது அதிகரிப்பு: சுங்கத் துறை அறிக்கையில் தகவல்

மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது என்று சுங்கத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:47 AM
பகிர்:


மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது என்று சுங்கத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான மியான்மரின் எல்லையில் 398 கி.மீ. தொலைவு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் வருகிறது. மியான்மர்- மணிப்பூர் எல்லையை ஒட்டி, இரு பகுதிகளிலும் வசிப்பவர்கள், எல்லை தாண்டி 16 கி.மீ. தொலைவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கடத்தல்காரர்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக தங்கம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருள்களைக் கடத்தி வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் எல்லை வழியாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது என்று இம்பாலில் உள்ள கடத்தல் தடுப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டில் வடகிழக்கு பிராந்தியத்தில் மொத்தம் ரூ.84.12 கோடி மதிப்புள்ள 267.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணிப்பூரில் மட்டும் ரூ.40 கோடி மதிப்புள்ள 137.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள 16.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை வழியாகக் கடத்தி வரப்படும் தங்கம், மணிப்பூருக்கும், பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால், அந்த தங்கம் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்ற விவரம் அவற்றில் இடம்பெற்றிருக்காது.
பெரும்பாலும் மணிப்பூர் மற்றும் மியான்மர் எல்லையில் வசிப்பவர்களே கடத்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அதிகபட்சமாக, ரூ.2,000 வரை பெறுகிறார்கள். கடத்தல் கும்பல் மிகவும் எச்சரிக்கையாக, திட்டமிட்டு கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள், பரவலாக நடத்தும் சோதனைகளில் கடத்தல் பொருள்களைப் பறிமுதல் செய்கின்றன. ஆனால், நாங்கள் உளவுத் துறை அளிக்கும் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.