முகப்பு
இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்ட முதியவர் தற்கொலை

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்(என்ஆர்சி) இறுதி வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:48 AM
பகிர்:


அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்(என்ஆர்சி) இறுதி வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் நீரோத் குமார் தாஸ்(74) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் யார்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர் விடுபட்டிருந்தது.
மங்கள்தாய் மாவட்டம், கருபேடியா பகுதியைச் சேர்ந்த நீரோத் குமார் தாஸ், தனது பெயர் என்ஆர்சி பட்டியலில் விடுபட்டதற்காக ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதியுள்ள தற்கொலை கடிதத்தில், வெளிநாட்டவர் என்று அவமானப்படுவதில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இவரோடு சேர்த்து இதுவரை 3 பேர், பட்டியலில் பெயர் விடுபட்ட காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தாஸ், வழக்குரைஞராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட என்ஆர்சி பட்டியலில் அவரது பெயர் விடுபட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி, மகன், மகள்கள், உறவினர் உள்பட அனைவரது பெயரும் பட்டியலில் இருந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்ட போது, அவரது பெயர் வெளிநாட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் விரக்தியடைந்த தாஸ், இரு மாதங்களாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த அதிகாரி கூறினார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்து தாஸின் உறவினர்களும், உள்ளூர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து தாஸ் பெயர், பட்டியலில் ஏன் விடுபட்டது? என்று விசாரணை நடத்துவோம் என போலீஸார் உறுதியளித்த பின்னரே அவரது உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் அனுமதித்தனர். 
இதனிடையே, தாஸ் பெயரை பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருபேடியா பகுதியில் மாணவர்கள் அமைப்பு திங்கள்கிழமை முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். அதனால் அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், கடைகள், வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.