காஷ்மீர்: வன்முறையில் இளைஞர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வன்முறை கும்பல் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வன்முறை கும்பல் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் 12 கிராமங்களில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதையடுத்து அந்த பகுதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, சில இடங்களில் இளைஞர்கள் இணைந்து பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல வைக்கும் எண்ணத்தில் போராட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். அதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஃபயாஸ் அகமது வானி என்னும் இளைஞர் உயிரிழந்ததாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.