முகப்பு
இந்தியா

ம.பி. முதல்வர் வாகனம் மீது தாக்குதல்: 9 பேர் கைது

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் சென்ற வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில்

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:09 AM
பகிர்:


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் சென்ற வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அதனை அக்கட்சி மறுத்துள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த எவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று மாநில எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி எம்எல்ஏவுமான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அஜய் சிங்கின் தொகுதியான சுர்ஹட் பகுதிக்கு செளஹான் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மெய்காவல் படையினரும், போலீஸாரும் சுதாரிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தில் முதல்வரின் வாகனத்தில் உள்ள கண்ணாடிகள் பலத்த சேதமடைந்தன. இதனிடையே, அந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் இருந்து செளஹானை காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதல்வருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும் இச்சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கல்வீச்சில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் ராம்விலாஸ் படேல், பங்கஜ் சிங் செளஹான், கெளரவ் சிங் செளஹான், ரோஷன் சிங், சவுரவ் துவிவேதி, சிவேத்ரா சிங், சவுரவ் சிங், சரண் சிங், சஞ்சய் சிங் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, கைதான அனைவரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தக் கூற்றை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், தாம் ரத்தம் சிந்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாகத் தெரிவித்தார். 
இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
இதற்கு முன்பு இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியதில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சி அதை செய்திருக்கிறது. 
சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும், மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்திடமும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எந்த திசையை நோக்கி உங்கள் கட்சியை கொண்டு செல்ல முனைகிறீர்கள்? காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில் உங்களுக்கு உடன்பாடா? இதற்கெல்லாம் அவர்கள் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார் சிவராஜ் சிங் செளஹான்.
கல்வீச்சு தாக்குல் நடைபெற்ற பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற செளஹான், துணிவிருந்தால் தம்முடன் நேரடியாக மோதுமாறு அஜய் சிங்குக்கு சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.