முகப்பு
இந்தியா

'டிக் டாக்' தடை உத்தரவுக்கு எதிரான மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் 

டிக் டாக் செயலி குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதாக  உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

புது தில்லி: டிக் டாக் செயலி குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதாக  உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

நாடு முழுவதும் பிரபலமாகி உள்ள டிக் டாக் செயலியை இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த  பிப்ரவரி மாதம் டிக் டாக் செயலியை தடைசெய்ய மத்திய அரசுக்கு  தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் டிக் டாக் செயலியை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி டிக் டாக் செயலியை தடைசெய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் கடந்த புதன்கிழமை (03.04.19) அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் டிக் டாக் செயலியை அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இணையதளத்தில் குழந்தைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. இதேபோன்று இந்தியாவிலும் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதிகள்  தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுப்பதற்கான சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும் ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும்  டிக் டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டனர். மேலும் டிக் டாக் விடியோவை தொலைக்காட்சிகளில் வெளியிடத் தடை விதித்தும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

இதையடுத்து வழக்குரைஞர்கள் தரப்பில், பிராங்க் ஷோ என்று அழைக்கப்படும் குறும்பு விடியோ எடுக்கப்படுவதால் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இதனால் உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படும் நிலை உள்ளது என்றனர். இதையடுத்து நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு விடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடாமல் இருக்க நடவடிக்கை தேவை என கருத்து தெரிவித்து வழக்கை, வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் டிக் டாக் செயலி குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதாக  உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இதுதொடர்பான மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்துடன் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்தார். அப்போது அவர் டிக் டாக் செயலியானது மிக அதிக அளவில் தரவிறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மிக அதிகமானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுதொடர்பான பிரதிநிதிகள் யாருடைய தரப்பையும் கருதாமல், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

அவரது வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த விவகாரம் குறித்து கவனிப்பதாக உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments