இந்தியா

தேசப் பாதுகாப்பை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறேனா?: பிரதமர் மோடி மறுப்பு

DIN

தேர்தல் ஆதாயத்துக்காக, தேசப் பாதுகாப்பு விஷயங்களை பாஜக கூட்டணி தலைவர்கள் பேசுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம், தர்பங்கா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மக்களவைக்கு இதுவரை நடந்து முடிந்துள்ள 3 கட்ட தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு வந்த எதிர்க்கட்சிகள் அதை விட்டு விட்டனர். தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் சுஷீல் குமார் மோடியும்,  மாநிலத்தின் தொலைதூர கிராமங்களிலும் மின்வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். 
அதற்காக, அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநில மக்களுக்கு "லாந்தர்' விளக்கு தேவையில்லாத ஒன்றாகி விட்டது. (லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கை மோடி மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).
ஒரு காலத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்த தர்பங்காவில் உங்கள் காவலனாகிய நான் அமைதியை உறுதிப்படுத்தியிருக்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் 40, 20 தொகுதிகளில் போட்டியிடும் பிராந்திய கட்சிகளின் தலைவர்
கள் கூட பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். 
அதற்கும் ஒரு படி மேலாக, கர்நாடகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் தலைவரும் பிரதமர் போட்டியில் இருக்கிறார். (கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்ததை மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டினார்).
இவர்கள் பயங்கரவாதத்தை ஒடுக்குவார்கள் என்று நம்பலாமா? அதே சமயம், உங்கள் காவலனாகிய என்னாலும் தனியாகப் போரிட முடியாது; உங்கள் வாக்குகள் இருந்தால் அது சாத்தியமாகும்.
இந்தத் தொகுதியில் மட்டுமல்லாது, வேறு எந்தத் தொகுதியிலும் பாஜக வேட்பாளருக்கோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளருக்கோ நீங்கள் செலுத்தும் வாக்கு எனக்கே வந்து சேரும். தேர்தல் ஆதாயத்துக்காக, தேசப் பாதுகாப்பு விஷயங்களை நான் பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 
தேசப் பாதுகாப்பும், பயங்கரவாதமும் முக்கிய விஷயங்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த சிறு உண்மையைக் கூட புரிந்துகொள்ள இயலாத நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. பயங்கரவாதத்தை வேரறுத்தால்தான் மாநிலத்தில் ஏழ்மை நிலையை ஒழிக்க முடியும்.
நம்மால் உருவாக்கப்பட இருக்கும் புதிய இந்தியா, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களைக் கண்டறிந்து, அவர்களை கூண்டோடு அழிக்கும் என்றார் பிரதமர் மோடி.
விரக்தியில் எதிர்க்கட்சிகள்: அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம், புந்தேல்கண்ட் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பாதி வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இதுவரை நடந்துமுடிந்த தேர்தலின் முடிவுகளை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொண்டுள்ளன. இதனால், அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கான முதல் பாதியில், என்னையும், எனது தலைமையிலான அரசையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துப் பேசினர். அவர்களின் பிரசாரம் எடுபடவில்லை. 
எனவே, மறு பாதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறி வருகிறார்கள் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT