இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: பிரியங்கா கருத்து

DIN


ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கும் தீர்மானத்துக்கும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கும் நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் நிலப் பிரச்னை தொடர்பாகக் கடந்த மாதம் 17-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பழங்குடியினர் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பிரியங்கா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாக உறுதியளித்திருந்தேன். 
அதன் காரணமாகவே தற்போது அவர்களைச் சந்தித்துள்ளேன். இந்த விவகாரத்தில் மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய விதம், அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். சில விஷயங்களைச் செய்ய வேண்டுமானால், அதற்குரிய நடைமுறைகள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. யாரையும் கலந்தாலோசிக்காமல் சுயமாக முடிவெடுக்கும் பாஜகவைப் போல அல்லாமல், அனைத்து மக்களையும் கலந்தாலோசித்து குறிப்பிட்ட விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் உள்ளது என்றார் பிரியங்கா.

அரசியல் நாடகம்: பிரியங்காவின் பயணம் குறித்து உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறுகையில், சோன்பத்ரா சம்பவத்தின் அடிப்படைக் காரணத்தை உற்றுநோக்கினால், அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது தெரியவரும். 
முந்தைய காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறுகளுக்கு வருந்தியே பிரியங்கா இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். சோன்பத்ரா சம்பவம் தொடர்பாக, விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பிரியங்கா சந்தித்துள்ளது, வெறும் அரசியல் நாடகம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT