முகப்பு
இந்தியா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு பற்றிய புத்தகம் வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு தொடர்பான புத்தகத்தை அவரது மகள் அனிதா போஸ் தலைமையிலான பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 18 ஆகஸ்ட், 2019 at 1:28 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:20 PM

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு தொடர்பான புத்தகத்தை அவரது மகள் அனிதா போஸ் தலைமையிலான பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர், சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 2 முறை பொறுப்பேற்ற அவர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவிக்கும் நோக்கில், தனது பதவியை ராஜிநாமா செய்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஜப்பான் சென்று பிரிட்டிஷாருக்கு எதிராகப் படைகளைத் திரட்டினார். சிங்கப்பூர், பர்மா (தற்போதைய மியான்மர்) உள்ளிட்ட நாடுகளிலும் அவர் ஆதரவு திரட்டினார்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் 1944-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் பெரும் போர் ஒன்றை நிகழ்த்தினார். இதையடுத்து, 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் மர்மமான முறையில் சுபாஷ் சந்திர போஸ் இறந்தார். அவரது இறப்பு தொடர்பான மர்மங்கள் பல்வேறு வடிவங்களில் இன்றும் உலவி வருகின்றன. எனினும், அது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவரது 74-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுபாஷ் சந்திர போஸின் வரலாற்றை சுவாரசியமாகத் தெரிவிக்கும் "மகாநாயக்' என்ற புத்தகத்தை அவரது மகள் அனிதா போஸ் தலைமையிலான "ஏகா' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 
"மகாநாயக்' புத்தகமானது, கடந்த 1998-ஆம் ஆண்டு முதன் முதலில் மராத்தி மொழியில் விஸ்வாஸ் பாட்டீல் என்பவரால் வெளியிடப்பட்டது. பின்னர், கீர்த்தி ராமச்சந்திரா அப்புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதன் திருத்தப்பட்ட பதிப்பை "ஏகா' பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அனிதா போஸ் கூறுகையில், ""சுபாஷ் சந்திர போஸின் உண்மை வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமிக்க மொழிநடையில், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விஸ்வாஸ் பாட்டீல் படைத்துள்ளார்'' என்றார்.
இது தொடர்பாக, விஸ்வாஸ் பாட்டீல் கூறுகையில், ""23 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, சுபாஷ் சந்திர போஸின் நண்பர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்க்கை குறித்து ஆராய சுமார் 7 ஆண்டுகளை நான் செலவிட்டேன். 
நேதாஜி சென்ற அனைத்து இடங்களையும் நேரில் கண்டு அவர் தொடர்பான வரலாறுகளைச் சேகரித்து புத்தகமாக வெளியிட்டேன். தற்போது, அவரது மகள் அனிதா போஸின் அங்கீகாரம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.