இந்தியா

அயோத்தி வழக்கு: சமஸ்கிருத மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டை வைத்து வாதம்

DIN


அயோத்தி வழக்கு விசாரணையில், சமஸ்கிருத மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டை முன்வைத்து ராம் லல்லா விராஜ்மான் தரப்பு வழக்குரைஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். 

அயோத்தி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தினசரி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

தொடர்ந்து 8-ஆவது நாளாக நேற்று (திங்கள்கிழமை) வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவசரப் பணி காரணமாக சென்றுவிட்டார். அதனால் வழக்கு விசாரணை நேற்று நடைபெறவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி, அயோத்தி வழக்கு விசாரணை 8-வது நாளாக இன்று நடைபெற்றது.

அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ராம் லல்லா விராஜ்மான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடுகையில், 

"அயோத்தியில் இருந்த மசூதியின் சுவர்களுக்கு இடையே, கல்வெட்டு ஒன்று இருந்தது. மசூதியை இடிக்கும்போது அது கீழே விழுந்தது. 4 அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட இந்த கல்வெட்டு, இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. இருந்தபோதிலும், சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டிருந்ததை அது சேதப்படுத்தவில்லை. இதன்மூலம், அங்கு விஷ்னு கடவுளின் அவதாரமான ராமர் கோயில் இருந்துள்ளதை இது குறிப்பிடுகிறது. 

அதில் உள்ள எழுத்துகள், கி.பி. 1114 - 1155 காலகட்டத்தில் அயோத்தியை ஆண்ட மன்னர் கோபிந்த் சந்திராவைக் குறிப்பிடுகிறது. மேலும், விஷ்னு கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அந்த இடத்தில் விஷ்னு கோயில் இருந்ததையும் கல்வெட்டில் உள்ள எழுத்துகள் குறிப்பிடுகின்றன. 

இதுமட்டுமில்லாமல், மன்னர் வம்சத்தின் தகவல்களையும் அந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன்மூலம், சாகேத் மண்ட்லாவின் தலைநகரம் அயோத்தி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

அந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சமஸ்கிருத மொழியை மொழிபெயர்த்த அகழ்வராய்ச்சித் துறை மூத்த அதிகாரி கே.வி. ரமேஷ், இந்த கல்வெட்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதி செய்துள்ளார். ஹிந்து மத மனுதாரர்கள் இவரது அறிக்கையை ஆதாரமாக முன்வைத்தனர். 

இதையடுத்து, இந்த கல்வெட்டின் நம்பகத்தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏதும் இல்லை என்று பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர், இந்த கல்வெட்டு மீட்கப்பட்டதில் சந்தேகம் நிலவுகிறது என்றார். காரணம், இது ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பத்திரிகையாளர் அசோக் சந்திரா முன்னிலையில் மீட்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கில், அசோக் சந்திரா மற்றும் கே.வி. ரமேஷ் ஆகியோர் சாட்சிகளாக தங்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். 

இந்த கல்வெட்டு தற்போது எங்கிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கேட்டதற்கு, அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாக வழக்குரைஞர் வைத்தியநாதன் தெரிவித்தார். மேலும், அகழ்வராய்ச்சித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், மிகப் பெரிய மண்டபம் ஒன்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஹிந்து மதத்தில் நம்பிக்கையுடையவர்கள் வழிபடுவதற்காக பல்வேறு தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அறிக்கையின் நம்பகத்தன்மையில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று வழக்குரைஞர் வைத்தியநாதன் வாதிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT