இந்தியா

ஊழல் வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருக்கு ரூ.100 கோடி அபராதம், 7 ஆண்டு சிறை

DIN


   
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ஜெயினுக்கு ரூ.100 கோடி அபராதமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் அளித்து துலே மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். 

கடந்த 1990 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்கான் புறநகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் தொகுப்பு வீடுகளை கட்டி, வீடற்ற மக்களுக்கு அளிப்பதற்காக "கார்குல் வீட்டு வசதி திட்டம்" தொடங்கப்பட்டது.

அப்போது அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ஜெயின் மற்றும் சிலர் இந்த திட்டத்தில் சுமார் ரூ. 29 கோடி ஊழல் செய்ததாகவும், கட்டுமான ஒப்பந்தக்காரருடன் சமரசம் செய்து, வெறும் 1500 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜலகான் நகராட்சி ஆணையர் பர்வின் கெடாம் 2006 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார்.

நகராட்சி ஆணையர் பர்வின் கெடாம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் சிவசேனா கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயினை 2012 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு ஆண்டிற்கு மேலாக சிறையில் இருந்த சுரேஷ் ஜெயின், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலையாகி, வழக்கை எதிர்கொண்டு வந்தார். 

இதே வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் அமைச்சர் குலாப்ராவ் தியோகர் உள்பட மொத்தம் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு துலே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 2012 மே மாதம் குலாப்ராவ் தியோகர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெறுவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1995 முதல் 2000 வரை ஜல்கான் நகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர். 

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தீர்ப்பளித்த துலே மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த், அம்மாநில முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயின் மற்றும் குலாப்ராவ் தியோகர் ஆகியோருடன் 46 பேருக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். 

நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த் அதிரடி தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயினுக்கு ரூ. 100 கோடி அபராதமும், 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் விதித்து உத்தரவிட்டார். மற்றொரு முன்னாள் அமைச்சரான குலாப்ராவ் டியோகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், இவ்வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள முன்னாள் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்த உடனேயே, நீதிமன்றத்தில் ஆஜரான 48 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT