இந்தியா

2019ல் வெங்காயத்தின் சராசரி விலை 5 மடங்காக உயர்வு: மாநிலங்களவையில் தகவல்

DIN


புது தில்லி: கடந்த 2018ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு வெங்காயத்தின் சராசரி விலை 5 மடங்கு அதிகரித்து, ஒரு கிலோ வெங்காயம் ரூ.101.35க்கு விற்பனையானதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையினால் காரீஃப் பருவ கால வெங்காய உற்பத்தியில் பாதிப்பு மற்றும் காரீஃப் பருவத்துக்கு பிந்தைய சாகுபடி ஆகியவை காரணமாக வெங்காய உற்பத்தி 22 சதவீதம் அளவுக்குக் குறைந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் வெங்காய விலை 81% உயர்ந்ததாகவும், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் டான்வே ரோஸாஹேப் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 10ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் சராசரி விலை ரூ.101.35 ஆக இருப்பதாகவும், இதுவே கடந்த மாதம் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.55.95 ஆகவும், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.19.69 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், 2018-19ம் ஆண்டு காலத்தில் வெங்காய உற்பத்தி 69.91 லட்சம் டன்களாக இருந்த நிலையில், காரீஃப் பருவ சாகுபடி மற்றும் காரீஃப் பருவத்துக்கு பிந்தைய சாகுபடி பாதிப்புகள் காரணமாக 2019 - 20ம் ஆண்டில் 54.73 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தியாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

வெங்காயம் உற்பத்தியாகும் கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், உற்பத்தி பாதிக்கப்பட்டதும், தேவை அதிகமாக இருந்தபோது வரத்துக் குறைந்ததால், பெரிய அளவில் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்து விட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், ஏற்றுமதியை தடை செய்து, பல்வேறு நாடுகளிடம் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT