மேற்கு வங்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது சிபிஐ
மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
புது தில்லி: மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை ஆணையர் மற்றும் சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பிரமாணப் பத்திரத்தில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஆவணங்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்க அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு, வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. ராஜீவ்குமாருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரி, வழக்குத் தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்களை குற்றவாளிகளிடமே வழங்கியுள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. நேற்று முன்தினம் காவல் ஆணையரை விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதோடு, காவல்துறை ஆணையருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால், அவர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
வழக்கின் பின்னணி:
ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ராஜீவ் குமாரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குச் சென்றால் டிஜிபி ராஜீவ்குமார் தடைகளை ஏற்படுத்துவதாகவும் சிபிஐ புகார் கூறியிருந்தது.
பிரச்னை என்ன?: மேற்கு வங்கத்தில் கொடிகட்டிப் பறந்த "ரோஸ் வேலி', "சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர காவல்துறைத் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்தபோது, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.
சிபிஐ அதிகாரிகள் தடுத்துநிறுத்தம்: இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காவல்துறைக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தனர். அதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு செல்லுமாறு சிபிஐ அதிகாரிகளை காவல்துறை அறிவுறுத்தியது.
அதேசமயம், சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்றனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் உள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
கொல்கத்தாவில் பதற்றம்: சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்; முதல்வர் மம்தா ஆலோசனை
திடீர் போராட்டம்: இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்னா போராட்டத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
தங்களை எதிர்க்கும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐ அமைப்பை அவர்கள் ஏவி விட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான எனது போராட்டத்துக்கு அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். அவரது இந்த தர்னா 2வது நாளாக நீடிக்கிறது
இந்த செய்தி தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள.. சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து மம்தா தர்னா
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு: மம்தாவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.