இந்தியா

புல்வாமா தாக்குதல் சம்பவம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாக் உடனடி நடவடிக்கை - ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

DIN


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் உச்சபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்; பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யக் கோரி, ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அதுபோன்ற கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றார் அவர்.
ஜம்முவில் கடந்த வாரம் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவினரின் வாகனம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதுடன், அந்த வாகனத்தின் முன் பாகிஸ்தான் கொடியும் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்டீபனின் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். 
அதற்கு பதிலளித்த அவர், அந்த சம்பவம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா. வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படியும், அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படியும் இந்திய தரப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்: இதனிடையே, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிச்செல் பச்சிலெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லே கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலுக்கு மிச்செல் பச்சிலெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி, காஷ்மீரைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மிச்செல் கவலை தெரிவித்துள்ளார் என்று ரூபர்ட் கோல்வில்லே கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT