முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டர் பேர வழக்கு: ராஜீவ் சக்ஸேனாவுக்கு ஜாமீன்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு தில்லி நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:28 am IST
பகிர்:

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு தில்லி நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
ரூ,5 லட்சத்துக்கான பிரமாண பத்திரம், அதே அளவு தொகைக்கான இரு உத்தரவாதம் ஆகியவற்றை அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். 
அதே நேரத்தில் ஜாமீனில் இருக்கும் காலகட்டத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபையைச் சேர்ந்த யுஎச்ஒய் சக்ஸேனா, மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக சக்ஸேனா உள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. 
சக்ஸேனா துபையில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார்.
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. 
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு  ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. 
இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போதைய மத்திய அரசு அறிவித்தது.
இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஃபின்மேகானிகா நிறுவன முன்னாள் இயக்குநர்கள், சக்ஸேனாவின் மனைவி ஷிவானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. 
இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.