இந்தியா

சிபிஐ இயக்குநருக்கு அதிகாரம்?: முடிவெடுக்கும் குழுவில் நீதிபதி ஏ.கே.சிக்ரி

DIN


சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அலோக் குமார் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது குறித்து முடிவெடுக்கும் உயர்நிலைக் குழுவில் தனது பிரதிநிதியாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரியை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்துள்ளார். 
இவர், கோகோய்க்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியாவார்.
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், அவர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது; அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பொதுவாக சிபிஐ இயக்குநரை பணியில் இருந்து மாற்ற வேண்டுமெனில், பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, அலோக் குமாருக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெறும் இந்த உயர்நிலைக் குழுவில் தனது பிரதிநிதியாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்தக் குழு, புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது.
கார்கே கருத்து: ஆனால், அந்தக் கூட்டத்தில் தன்னால் உடனே பங்கேற்க இயலாது என்று மல்லிகார்ஜுன கார்கே முன்கூட்டியே கூறிவிட்டார். அலோக் வர்மா மீதான வழக்கின் தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை என்றும், கூட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை நடத்தலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் உடனடியாத் தெரியவில்லை.
அலோக் வர்மா, சிபிஐ இயக்குநராக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவரது 2 ஆண்டு கால பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பொறுப்பேற்பு
சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மா புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். 77 நாள்களுக்கு பிறகு சிபிஐ அலுவலகத்துக்கு வந்த அவர், தனது அலுவலகப் பணிகளை தொடர்ந்தார். அவர், முதல்கட்ட விசாரணை நடத்துதற்கும், ஏற்கெனவே விசாரித்து வந்த வழக்குகளின் விசாரணையின் தொடர்வதற்கும் அலோக் குமார் வர்மாவுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த அலோக் வர்மா.


இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை அலோக் குமார் விசாரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாக, மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவரது அடுத்தகட்ட நடவடிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இடமாற்ற உத்தரவு ரத்து: இதனிடையே, மீண்டும் பணிக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த பெரும்பாலான பணியிட மாற்ற உத்தரவுகளை அலோக் குமார் ரத்து செய்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT