கொல்கத்தா: 2ஜி ஊழல் கும்பலுடன் புதிதாக ஒரு ஜி இணைந்துள்ளது என்று பாஜக தேசியச் செயலர் அமித் ஷா சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக தேசியச் செயலர் அமித் ஷா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் நடந்திருப்பதற்கு நாமே சாட்சி. தற்போது இந்த 2ஜி ஊழல் கும்பலுடன் மேலும் ஒரு ஜி இணைந்துள்ளது. அவர் பெயர் பிரியங்கா காந்தி. இனி நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த அளவுக்கு ஊழல் செய்வார்கள் என்று?
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை வர்ணித்த அமித் ஷா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் குடும்ப அரசியலையே நடத்துகிறது. மம்தா பானர்ஜியின் உறவினர், அடுத்து கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக உள்ளார் என்று கூறினார்.
மேலும், நாட்டு மக்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக வர வேண்டும் என்பதற்காக வாக்களிக்கும் அதே நேரத்தில், மேற்கு வங்க மக்கள் அனைவரும், தங்களுக்கு அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வர வாக்களிப்பார்கள்.
மேற்கு வங்கத்தில் மீண்டும் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ரத யாத்திரையை தடை செய்வதன் மூலமோ, பாஜக தொண்டர்களைக் கொல்வதன் மூலமோ, எனது ஹெலிகாப்டரை தரையிறங்க விடாமல் தடுப்பதன் மூலமோ, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட முடியாது. இது எல்லாவற்றுக்கும் மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள் என்று அமித் ஷா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.